தூத்துக்குடி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
தூத்துக்குடி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடக்க விழா
தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாம் தொடக்க விழா தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறையிதில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்காகவும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விளக்கங்களையும் செயலாக்கங்களையும், மருத்துவ சேவைகளையும் விவசாயிகளின் இருப்பிடங்களிலேயே வழங்கும் விதமாகவும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 760 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 240 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒரு முகாம் நடத்த ரூ.10 ஆயிரம் வீதம் 240 முகாம்களுக்கும் ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து நடைபெறும்.
ஆம்புலன்சு
முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி, கோழி கழிச்சல் தடுப்பூசி, தீவன பயிர் மற்றும் தீவனப்புல் சாகுபடி விளக்கம், சிறு அறுவை சிகிச்சை, சிறு கண்காட்சி, கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குதல் போன்றவை வழங்கப்படுகிறது. தொலைதூர குக்கிராமங்களில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மருந்தகம் செல்வதற்கு வசதி வாய்ப்பற்று இருப்பதால் அவர்களுக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆம்புலன்சு இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆம்புலன்சு வாகனம் வழங்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்சு வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சீ.ராஜன், உதவி இயக்குநர் அ.ஜோசப் ராஜ், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) எட்வின், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தூத்துக்குடி யூனியன் தலைவர் வாசுகி, மேலத்தட்டப்பாறை பஞ்சாயத்து தலைவர் மு.மகேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.