தூத்துக்குடி அருகேஎரிவாயு குழாய் அமைக்கும் பணியின்போதுமண்ணில் புதைந்த தொழிலாளி
தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் அமைக்கும் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருேக எரிவாயு குழாய் அமைக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
குழாய்கள் அமைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை ஓரமாக கடந்த சில மாதங்களாக ராட்சத எந்திரங்கள் மற்றும் பொக்லைன் மூலம் குழி தோண்டி குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்ணில் சிக்கிய தொழிலாளி
நேற்று முன்தினம் தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் கனநீர் ஆலை குடியிருப்பு அருகில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து சுமார் 10 அடிக்கு கீழே இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஒரு தொழிலாளி மட்டும் கழுத்தளவு மண்ணில் சிக்கிக்கொண்டார். சகதொழிலாளர்கள் உடனடியாக வெளியேறி அபயக்குரல் எழுப்பினர்.
உயிருடன் பத்திரமாக மீட்பு
இதனையடுத்து மேலே நின்ற தொழில்நுட்ப வல்லுனர்கள், என்ஜினீயர்கள் உள்ளிட்டவர்கள் விரைவாக செயல்பட்டு மேலும் மண் சரியாமலும், சாதுர்யமாக செயல்பட்டும் சுமார் ½ மணி நேரம் போராடி மண்ணில் புதைந்த தொழிலாளியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.