தூத்துக்குடி அருகே கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் திறன் பயிற்சி
தூத்துக்குடி அருகே கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் திறன் பயிற்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி அருகே, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திறன் பயிற்சி
தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த 3 மாத திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது, கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ. படித்தவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
இங்கு கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பு போன்ற தொழிலுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தகுதிகள்
ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாட்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சி தூத்துக்குடி அருகே தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும், பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இங்கு கொத்தனார், பற்றவைப்பு, மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துதல், மரவேலை, கம்பிவளைப்பு போன்ற பயிற்ி அளிக்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.