தூத்துக்குடி அருகேதேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி:வெற்றிபெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு
தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி அருகே நடந்த தேசிய அளவிலான கடல் அலைச்சறுக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அலைச்சறுக்கு போட்டி
தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை கடற்கரையில் சென்னை தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன், இந்திய பிரிமிர் கைட் போட்டிங் அசோசியேசன் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகளை நடத்தியது. இந்த போட்டி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான அலைச்சறுக்கு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி அருகே உள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஜோதிபாசு முதல் பரிசையும், கர்நாடகாவைச் சேர்ந்த சாம் இரண்டாவது பரிசையும், கோவாவை சேர்ந்த பிலிப் மூன்றாவது பரிசையும் வென்றனர். பெண்கள் பிரிவில் கோவாவை சேர்ந்த கியோனா ரஜினி முதல் பரிசையும், கர்நாடகாவை சேர்ந்த கார்டியா ஷைனி இரண்டாவது பரிசையும், ஐதராபாத்தை சேர்ந்த அவிஷ்மா மூன்றாவது பரிசையும் வென்றனர்.
பரிசளிப்பு விழா
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் அஜித் தியாஸ், தூத்துக்குடி அக்வா அவுட் பேக் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் மோத்தா ஆகியோர் நன்றி கூறினர்.