தூத்துக்குடி அருகேரேஷன் அரிசி கடத்திய கார் கவிழ்ந்தது
தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் கவிழ்ந்தது. காரில் இருந்த 560 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே உள்ள சந்திரகிரி விலக்கு பகுதியில் ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. அதன் அருகே மூட்டைகள் சிதறி கிடந்தன.
உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். காரின் அருகே நின்று கொண்டு இருந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பாலு மகன் அஜித்குமார் (வயது 27), கந்தசாமிபுரத்தை சேர்ந்த அழகிரிசாமி மகன் பழனிமுருகன் (48) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளில் மொத்தம் 560 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
உடனடியாக போலீசார் அஜித்குமார், பழனிமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழசெய்த்தலை, மேலசெய்த்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாவட்டங்களில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.