தூத்துக்குடி அருகேசுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை


தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

பிரிக்க கூடாது

தூத்துக்குடி அருகே உள்ள சில்வர்புரம், பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த சி.எஸ்.ஐ சபை மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சில்வர்புரம் பரிசுத்த தோமா ஆலயம், பண்டாரம்பட்டி பரிசுத்த திரித்துவ ஆலயம் ஆகிய இரண்டு ஆலய சபைகளும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் உள்ள டூவிபுரம் சேகரத்தை சேர்ந்தவை ஆகும். தற்போது எங்கள் பகுதியை டூவிபுரம் சேகரத்தில் இருந்து பிரித்து தனி சேகரமாக உருவாக்க திருமண்டல நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர். தனி சேகரமாக பிரித்தால் எங்கள் பகுதி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, தனி சேகரமாக பிரிக்காமல் நாங்கள் டூவிபுரம் சேகரத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமண்டல நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அம்பேத்கர் சிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர், திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தினர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் பறையர் சமுதாய ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை. இந்த கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், அம்பேத்கர் நினைவு பூங்கா பெயரை கிராம வருவாய் கணக்கில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தியாகி கக்கன் திறந்து வைத்த அம்பேத்கர் நினைவு பூங்கா கல்வெட்டை மீண்டும் பூங்காவில் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராடடம் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

தூத்துக்குடி அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த மக்கள் ஊர்த்தலைவர் இளங்கோ தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு பாத்தியப்பட்ட சுடுகாடு ஜாஹிர் உசேன் நகர் வடபகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டை நாங்கள் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் இந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்க தலைவர் ஐ.எஸ்.மாசிலாமணி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அரசு மருத்துவமனைகளில், பொது மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் நோயாளிகளில் மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல் நியாயவிலைக் கடைகளிலும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளித்து பொருட்களை முதலாவதாக கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான இருக்கைகளில் மற்ற பயணிகள் அமர்ந்து பயணிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.

காலி பணியிடம்

காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

மாப்பிள்ளையூரணி நேருகாலனி தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் வங்கப்படும் வீட்டு வரி ரசீதில் புகைப்படத்துடனும், வீட்டு வகை பெயர் குறித்தும் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story