உத்தமபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டீக்கடைக்காரர் அடித்து கொலை


உத்தமபாளையம் அருகே   கள்ளக்காதல் விவகாரத்தில் டீக்கடைக்காரர் அடித்து கொலை
x

உத்தமபாளைம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டீக்கடைக்காரர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்

தேனி

டீக்கடைக்காரர் சாவு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அழகு பகவதி (வயது 42). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மீனா (35) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அழகு பகவதி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது அழகு பகவதியின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பாக அவர் சாவதற்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த எண்கள், தொடர்பு கொண்ட எண்களை ஆய்வு செய்தனர்.

கள்ளக்காதல்

பின்னர் அவர் தொடர்பு கொண்ட சில நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதன்படி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (27), சிவசக்தி (24), சதீஷ்குமார் (26) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களது நண்பர் ஒருவருக்கும், அழகு பகவதி மனைவி மீனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த அழகு பகவதி, எங்களது நண்பன் மற்றும் அவரது மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் எங்களை அழைத்து நடந்ததை கூறினார். பின்னர் என்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் அழகு பகவதியை தீர்த்து கட்ட வேண்டும் என்றார்.

மண்வெட்டியால் அடித்து...

இதனால் நாங்கள் 3 பேரும் சேர்ந்து அழகு பகவதியை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக சம்பவத்தன்று இரவு மது குடிப்பதாக கூறி அழகுபகவதியை அழைத்து சென்றோம். பின்னர் 4 பேரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது நாங்கள் மறைத்து கொண்டு வந்த மண்வெட்டி கைப்பிடியால் அழகுபகவதியின் தலையில் அடித்தோம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் நாங்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டோம். இந்நிலையில் போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக கேரளாவிற்கு செல்ல நினைத்தோம். அதற்குள் போலீசிடம் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.


Next Story