வருசநாடு அருகேபாசி படர்ந்த தரைப்பாலத்தால் தொடர் விபத்து:இடித்து அகற்ற கோரிக்கை


வருசநாடு அருகேபாசி படர்ந்த தரைப்பாலத்தால் தொடர் விபத்து:இடித்து அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே பாசி படர்ந்த தரைப்பாலத்தால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பாலத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் இருந்து கீழபூசணூத்து செல்லும் சாலையின் குறுக்கே அல்லால் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அல்லால் ஓடையில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் செல்பவர்கள் பாசிகளால் வழுக்கி நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் 3 மாதங்கள் வரை தரைப்பாலத்தில் பாசிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் மழை காலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே தரைப்பாலத்தில் வளர்ந்துள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story