வருசநாடு அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை
வருசநாடு அருகே நோய் குணமாகாத விரக்தியில் பிளேடால் கழுத்தை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
வருசநாடு அருகே சீலமுத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு 3 வயதில் சிவரஞ்சனி என்ற பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வரனுக்கு கடந்த ஒரு ஆண்டாக காசநோய் இருந்து வந்தது. அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். நோய் குணமாகாத விரக்தியில் வாழ்வதை விட சாவதே மேல் என அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லை. ஈஸ்வரன் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பென்சில் துருவ பயன்படுத்தும் ஷார்ப்பனரில் உள்ள பிளேடை எடுத்தார்.
கழுத்தை அறுத்து தற்கொலை
பின்னர் அந்த பிளேடால் அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிக அளவு ரத்தம் வெளியேறியதில் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோய் குணமாகாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.