விழுப்புரம் அருகேஉரக்கடையின் சுவரில் துளையிட்டு பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே உரக்கடையின் சுவரில் துளையிட்டு பணம் திருடிய மர்ம நபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 40). இவர் அதே கிராமத்தில் உள்ள மெயின்ரோட்டில் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சந்தோஷ் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை 7 மணியளவில் கடையின் ஷட்டர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்புறத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். கடையில் இருந்த உர மூட்டைகளும் கிழிக்கப்பட்டு சேதமடைந்திருந்தன.
உடனே கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதிலிருந்த ரூ.1,500 திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் முன்பக்க ஷட்டர் கதவை உடைக்க முயற்சித்து முடியாமல் போனதால் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியதோடு ஆத்திரத்தில் அங்கிருந்த உர மூட்டைகளையும் கிழித்து சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.