விளாத்திகுளம் அருகே யூரியா கலந்த அரிசியை கொடுத்து13 ஆடுகளை கொன்ற விவசாயி கைது
விளாத்திகுளம் அருகே யூரியா கலந்த அரிசியை கொடுத்து 13 ஆடுகளை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே குமராபுரத்தில் யூரியா கலந்த அரிசியை தின்ற 13 ஆடுகள் பலியாகின. இந்த ஆடுகளை கொன்றதாக விவசாயி கைது ெசய்யப்பட்டார்.
நிலத்தில் மேய்ந்ததால் பிரச்சினை
விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் மேல தெருவை சேர்ந்தவர் உமையக்குஞ்சரம் (வயது 55). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள குமராபுரம் கிராமத்தில் 3 மாதங்களாக ஆட்டு கிடாய் போட்டு, அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (38) என்பவருக்கு சொந்தமான விவாய நிலத்தில் ஆடுகள் மேய்ந்துள்ளன. இதை கண்டித்த செந்தில்குமாருக்கும், உமையக்குஞ்சரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
13 ஆடுகள் திடீர் சாவு
அப்போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உமையக்குஞ்சரருக்கும் சொந்தமான 13 ஆடுகள் திடீரென இறந்து கிடந்தன. இதுதொடர்பாக உமையகுஞ்சரம் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் யூரியாவை அரிசியில் கலந்து ஆடுகளுக்கு கொடுத்து கொன்றது தெரியவந்தது.
விவசாயி கைது
இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். இறந்த ஆடுகள் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.