விளாத்திகுளம் அருகே சிறுதானிய உணவுப்பொருள் அங்காடி திறப்பு விழா
விளாத்திகுளம் அருகே சிறுதானிய உணவுப்பொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சிறுதானிய உணவுப்பொருள், பல்பொருள் அங்காடியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். இவ்விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
திறப்புவிழா
விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் அரசு நிதியுடன் இயங்கிவரும் புதூர் பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவுப்பொருட்கள் அடங்கிய மருதம் பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது. இவ்விழாவுக்கு ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அங்காடியை திறந்து வைத்து பார்வையிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பாராட்டு
அப்போது கலெக்டர் பேசுகையில், தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு இடத்திலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த நிறுவனமாக இந்த பயறு உற்பத்தியாளர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். 1,500 விவசாயிகள் சேர்ந்து ஒரு நிறுவனத்தை நடத்துவது சாதாரண விஷயமல்ல. நீங்கள் ஒருங்கிணைந்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது கூட்டு முயற்சிக்கு எனது பாராட்டுகள். மேலும் ஆடுகளை வளர்த்து அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வருங்காலத்தில் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும். உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்தே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்று நிறுவனத்தை அமைக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்.
இந்த நிறுவனம் மூலம் 2021-22-ம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும், 22-23-ம் ஆண்டில் ரூ.11 கோடிக்கும் விற்பனை செய்து வருவாய் ஈட்டி உள்ளனர். 23-24-ம் ஆண்டுக்கு ரூ.22 கோடி இலக்கு வைத்துள்ளனர். வரும் ஆண்டில் ரூ.100 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர வேண்டும், என்றார்.
தொடர்ந்து விளாத்திகுளம் புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியிலிருந்து பஞ்சை பிரித்தெடுக்கும் பிரிவு மற்றும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கினை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முருகப்பன், செயலாளர் எழில், பயறு உற்பத்தியாளர் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலர் பவித்ரா, பயறு உற்பத்தியாளர் கம்பெனி இயக்குநர்கள் தர்மலிங்கம், தமிழரசி, அரசு அலுவலர்கள், உற்பத்தியாளர் கம்பெனி உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இலவச சைக்கிள் வழங்கும் விழா
இதேபோன்று வேம்பார் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கராஜன் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ. 181 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி மரக்கன்றுகள் நடுவது குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
அதனைத் தொடர்ந்து பேரிலோவன்பட்டி தி.வே.நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் 91 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரஞ்சிதா தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ரவீந்திரன், பள்ளி கல்வி குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ. 91 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதூர் பள்ளி
புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அன்னைஷூபாபிளவர்லெட் தலைமை தாங்கினார். பள்ளியில் 174 மாணவ- மாணவிகளுக்கு அரசு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாகலாபுரம் சாமிஅய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அரசு இலவச சைக்கிள்களை 116 மாணவ- மாணவியருக்கு எம்.எல்.ஏ. வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள், கிளைச் செயலாளர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.