விளாத்திகுளம் அருகேவிபத்தில் பெயிண்டர் பலி
விளாத்திகுளம் அருகே விபத்தில் பெயிண்டர் பலியானார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம்அருகே உள்ள நாகலாபுரம் சமத்துவபுரம் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் சோலையப்பன் (வயது 51). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் நாகலாபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சோலையப்பன் அருப்புக்கோட்டையில் வேலை முடிந்து நாகலாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
முத்துச்சாமிபுரம் சர்ச் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சோலையப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.