விளாத்திகுளம் அருகே விபத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலி
விளாத்திகுளம் அருகே விபத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலியானார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், டிரைவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
பஞ்சாயத்து துணைத்தலைவர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 63). விவசாயியான இவர் பேரிலோவன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் முனியசாமி விளாத்திகுளம் அருகே வேடபட்டியில் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
போலீசார் வலைவீச்சு
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறந்த முனியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதன் டிரைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.