விளாத்திகுளம் அருகே ஓடை தண்ணீரில் முதியவர் உடலை சுமந்து சென்ற மக்கள்


விளாத்திகுளம் அருகே   ஓடை தண்ணீரில் முதியவர் உடலை சுமந்து சென்ற மக்கள்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இடுப்பளவு ஓடைத் தண்ணீரில் முதியவரின் உடலை மக்கள் சுமந்து சென்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இடுப்பளவு ஓடைத் தண்ணீரில் முதியவரின் உடலை மக்கள் சுமந்து சென்றனர்.

ஓடை தண்ணீர்

விளாத்திகுளம் அருகே உள்ளது மாவிலோடை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு அங்குள்ள ஓடையை கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் செல்லும்போது இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே ஓடை பகுதியில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாலம் அமைக்க வலியுறுத்தல்

இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கொப்பர கவுண்டர் என்ற ‌100 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் இருக்கும் ஓடையில் தற்போது மழை பெய்து தண்ணீர் நிரம்பி உள்ளதால் முதியவர் உடலை இடுப்பளவு தண்ணீரில் மிகுந்த சிரமத்துடன் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்தனர்.

சடலத்தை கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. எனவே இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story