விளாத்திகுளம் அருகே தொழிலாளி கண்மாய் தண்ணீரில் மூழ்கி பலி
விளாத்திகுளம் அருகே தொழிலாளி கண்மாய் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி (வயது 48). இவரும், இவரது மனைவி அந்தோணியம்மாளும் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் கென்னடி ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார்.
நீண்டநேரமாக அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடி உள்ளனர். அப்போது கண்மாய் கரையில், அவரது உடைகள் இருந்தன. இதை பார்த்த அவரது உறவினர்கள், கிராமத்து வாலிபர்கள் உதவியுடன் கண்மாயில் குதித்து கென்னடியை தேடினர். இதில், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, கென்னடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.