விளாத்திகுளம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுப்பழக்கத்தால் பிரச்சினை
விளாத்திகுளம் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபொண்ணுய இவருக்கும் விஜயலட்சுமி (வயது 20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒருவயதில் பெண் குழந்தை உள்ளது.
ராஜபொண்ணு விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு, கொய்யாப்பழம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜபொண்ணு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
தகராறு
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜபொண்ணு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். வியாபாரத்தில் கிடைத்த பெரும்பகுதி வருவாயை மதுகுடிக்க செலவு செய்துவிட்டு குறைவான பணத்தை மட்டுமே மனைவியிடம் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில்ஆத்திரம் அடைந்த ராஜபொண்ணு தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர் இரவு வரை வீடு திரும்பவில்லையாம்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் வீட்டில் இருந்த விஜயலட்சுமி சேலையால் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கியுள்ளார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் விஜயலட்சுமியின் உடலை தூக்கிலிருந்து இறக்கி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஜயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.