சுங்கக் கட்டண வசூல் குறித்து தணிக்கை தேவை -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சுங்கக் கட்டண வசூல் குறித்து தணிக்கை தேவை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் பகுதியை அமைக்க ஆன செலவு ரூ.536 கோடி மட்டும்தான். ஆனால், 13½ ஆண்டுகளில் ரூ.1,098 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மர்மம் நீடிப்பு
ஆனால், மொத்த வசூலான ரூ.1,098 கோடியில், ரூ.682 கோடி பராமரிப்பு பணிகளுக்காக செலவிடப்பட்டு விட்டதாகவும், ரூ.416 கோடி மட்டும்தான் முதலீடாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதலீட்டுக்காக செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.770 கோடியாக அதிகரித்து விட்டதாகவும், அதை ஈடுசெய்ய இன்னும் ரூ.354 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று கணக்கு காட்டப்பட்டது. இவ்வாறு கணக்கு காட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு சாலைக்குக்கூட கற்பனைக்கு எட்டிய காலம் வரை, முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.
சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.
தணிக்கை தேவை
எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக் கட்டணத்தை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.