நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்


நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
x

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி

சமயபுரம், ஆக.2-

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நீலிவனநாதர் கோவில்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்ற 61-வது தலமாகும். இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததை அடுத்து இக்கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் சேஷம், கிளி, காமதேனு, ரிஷபம், அன்னம், யாளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு தங்க குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விசா லாட்சி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

இதைத் தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க, பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை 6.10 மணிக்கு நிலை யை அடைந்தது.

விழாவில் கதிரவன் எம்.எல்.ஏ., மயில் பர்னிச்சர் உரிமையாளர் ஆர். செந்தில்குமார், எஸ்.ஏ.பப்ளிஷிங் நிறுவனர் என்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை திருப்பைஞ்சீலி ஊராட்சி தலைவர் பி. தியாகராஜன் தலைமையில் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஏற்பாடு

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்படி, உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடராஜர் புறப்பாடும், நாளை (புதன்கிழமை) விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Next Story