முதுநிலை மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்கள் வேண்டும்
முதுநிலை மருத்துவப்படிப்புக்கான ‘நீட்' தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்கள் வேண்டும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதுநிலை மருத்துவப்படிப்புக்காக மார்ச் 5-ந்தேதி நடைபெறவுள்ள 'நீட்' தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன. 'நீட்' (முதுகலை) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7-ந்தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13-ந்தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளிமாநிலங்களில் 'நீட்' எழுதும் நிலை உருவாகியுள்ளது.
வெகுதொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும்.
தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.