நெல்லை, தென்காசியில் 12 மையங்களில் 'நீட்' தேர்வு


நெல்லை, தென்காசியில் 12 மையங்களில் நீட் தேர்வு
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. 6,744 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. 6,744 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

'நீட்' நுழைவு தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக 'நீட்' நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவப்படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுவதற்காக 499 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

6,744 பேர் எழுதினர்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 'நீட்' நுழைவு தேர்வு நடைபெற்றது. அதன்படி நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பள்ளி, தியாகராஜநகர் புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் ஏ.வி.கே. இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6 ஆயிரத்து 879 மாணவ-மாணவிகள் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 6 ஆயிரத்து 744 பேர் நேற்று தேர்வு எழுதினர். 135 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கடும் கட்டுப்பாடுகள்

முன்னதாக தேர்வு மையங்களை கிருமிநாசினி மூலம் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து இருந்தனர். தேர்வு மையங்களின் நுழைவுவாயிலில் மாணவர்களின் பதிவெண்கள் ஒட்டப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதுவதற்கான அறைகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

கடும் கட்டுப்பாடுகளுடன் 'நீட்' தேர்வு நடைபெற்றது. தீவிர சோதனைக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் தங்களது நகைகளை கழட்டி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்.

உணவு ஊட்டிய பெற்றோர்கள்

சரியாக மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது. மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வெழுத மையத்துக்குள் செல்ல வேண்டும். அதன் பின்னர் வரும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒலிப்பெருக்கியில் அறிவுறுத்தியவாறு இருந்தனர்.

இதனால் பெரும்பாலானவர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். கடைசி நேரத்தில் வந்த சில மாணவர்களும் அவசரமாக தேர்வெழுத சென்றனர். தேர்வுமைய நுழைவுவாயில் அருகில் சில மாணவிகளுக்கு பெற்றோர்கள் உணவு ஊட்டினர். பின்னர் மாணவிகள் தேர்வெழுத சென்றனர்.

சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தனர். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் வரும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

நெல்லையில் நடந்த 'நீட்' தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சில மையங்களில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் அமர்ந்து இருக்கும் வகையில், தேர்வு மையங்களின் அருகில் உள்ள பள்ளிகளில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தேர்வு மையத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் வெளியே வந்தார். அவர் அங்கிருந்த கூட்டத்தில் அழைத்து வந்த உறவினரை காணாமல் தவித்தார். நீண்ட நேரம் ஆகியும் மாணவனை அழைத்து செல்ல யாரும் வராத சூழலில் தனியாக இருந்த மாணவனை கண்ட போலீசார், அவரிடம் விசாரித்தனர். மேலும் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பணம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story