நெல்லை: 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயற்சி - 3 பேர் கைது
முக்கூடல் அருகே 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்,
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கீழ பாப்பாக்குடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திக் -இசக்கியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பிரியங்கா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். 20-ம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் செல்போன் சிக்னல், சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குழந்தையை கடத்தியவர்களை போலீசார் கண்டறிந்தனர்.
பின்னர், அதே பகுதியை சேர்ந்த கனி(வயது57), முத்துசெல்வி(30), ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்(34) ஆகிய 3 பேரும் குழந்தையை கடத்தி ஆலங்குளத்தில் விற்க முயன்ற போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.