நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா, டிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கத்தின் எதிர்ப்புறத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது. இந்த பணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் எங்களது நிலத்தை வழங்கி விட்டோம். ஆனால் இதுவரை அந்த சாலை பணி நடக்கவில்லை. எனவே அந்த சாலையை விரைந்து அமைத்து மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

தச்சநல்லூர் 13-வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில், "உடையார்பட்டி பகுதியில் உள்ள தகனமேடை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடைக்கு இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள தகனமேடையை விரைந்து சீரமைத்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை பேட்டை 19-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் அல்லாபிச்சை தலைமையில் கொடுத்த மனுவில், "நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பேட்டை ரகுமான் பேட்டை பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடித்து காயப்படுத்தி உள்ளது. எனவே அந்த நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.


Next Story