நெல்லையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்; கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை


நெல்லையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்; கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
x

நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணி, பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடை வெளியை கடைப்பிடித்தல், கை கழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். இதை கண்டக்டர்கள் கண்காணிக்க வேண்டும். வியாபார நிறுவனங்களில் அனைவரும் முககவசம் அணிந்து கடைக்கு வர வேண்டும்.

இதேபோல் திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு குழு

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம், பொது வினியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், கூட்டுறவு இணைப்பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து உணவு பொருட்களை வினியோகிக்க வேண்டும். நெகிழி இல்லா நெல்லையப்பர் தேர் திருவிழா நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.


Next Story