நெல்லை, தென்காசியில் சதம் அடித்த தக்காளி விலை


நெல்லை, தென்காசியில்  சதம் அடித்த தக்காளி விலை
x

நெல்லை, தென்காசியில் தக்காளி விலை சதம் அடித்தது. அதாவது, மார்க்கெட்டுகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை, தென்காசியில் தக்காளி விலை சதம் அடித்தது. அதாவது, மார்க்கெட்டுகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி

குழம்பில் சுவை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் எந்த குழம்பு என்றாலும் அதில் நிச்சயம் தக்காளி இடம்பெறும். அந்த தக்காளி விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் தக்காளி விலை அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. அதன்பிறகு இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வந்த தக்காளி விலை நேற்று சதம் அடித்தது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் தக்காளியை குறைந்த அளவில் வாங்கி சென்றனர்.

மேலும் உயர வாய்ப்பு

இந்த மாதம் (வைகாசி) தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. நெல்லை காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் தக்காளி குறைவாக வருகிறது. இதனால் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதேபோல் அவரைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் தக்காளி மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகள் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தென்காசி-தூத்துக்குடி

இதேபோல் தென்காசி மார்க்கெட்டிலும் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைவாக ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது.


Next Story