நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுப்பித்து கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டு உள்ளது. எனவே பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேரமைப்பு தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அவற்றை நம்பி, வியாபாரிகள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக பஸ் நிலைய வளாகம் மூடி கிடக்கிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

பஸ்கள் இயக்க வேண்டும்

ஆரம்பத்தில் பஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கிய போது, டவுன் பஸ்கள் சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தை சுற்றி வந்து சென்றன. பின்னர் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுமான பணி முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் விநாயகம், கருப்பசாமி, ஸ்டீபன், பகவதிராஜன், சந்திப்பு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பெர்னான்டோ, ரவீந்திரன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story