நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் செயல்பட தொடங்கும்; அதிகாரிகள் தகவல்
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை அகற்றும் பணி 2-வது நாளாக நேற்று மும்முரமாக நடந்தது. வருகிற பொங்கல் பண்டிகைக்குள் பஸ் நிலையம் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை அகற்றும் பணி 2-வது நாளாக நேற்று மும்முரமாக நடந்தது. வருகிற பொங்கல் பண்டிகைக்குள் பஸ் நிலையம் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்திப்பு பஸ் நிலையம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையத்தை கடந்த 2017-ம் ஆண்டு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பஸ் நிலையம் மூடப்பட்டு பழைய கட்டிடங்களை இடித்து அகற்றினர். தொடர்ந்து வணிக வளாகங்கள், பார்க்கிங் வசதியுடன் நவீன பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அங்கு பூமிக்கு அடியில் பார்க்கிங் அமைக்கும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு கிடைத்த ஆற்று மணலை முறைகேடாக எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை வெளியே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள பெரிதும் அவதியடைகின்றனர். இதையடுத்து சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றி மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
2-வது நாளாக...
இதையடுத்து நெல்லை மாநகராட்சி நிரவாகம் சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மணலை அகற்றி வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை அகற்றும் பணி நேற்று முன்தினம் இரவில் தொடங்கியது.
நேற்று 2-வது நாளாக மணலை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணலை அள்ளி லாரிகளில் ஏற்றி, ராமையன்பட்டி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.
லாரிகளின் பதிவு எண், மணலுடன் புறப்பட்ட நேரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இதேபோல் ராமையன்பட்டி குப்பை கிடங்கு வளாகத்திலும் லாரிகள் மணல் கொண்டு வரும் நேரமும் பதிவு செய்யப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன. இந்த பணிகளை நெல்லை கோர்ட்டு வக்கீல் கமிஷனர் வேலுச்சாமி, மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் கண்காணித்தனர்.
பொங்கலுக்குள் செயல்பட...
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல் ஓரிரு நாட்களுக்குள் அள்ளி அகற்றப்பட்டு விடும். அதன் பிறகு கட்டிடங்களுக்கு தண்ணீர், மின் இணைப்பு வசதி வழங்க வேண்டி உள்ளது. மேற்கு பகுதியை சமப்படுத்தி பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த பணிகள் முடிவடைந்து வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் பஸ் நிலையம் செயல்பட தொடங்கும். இங்கிருந்து வழக்கமான டவுன் பஸ்களும், தென்காசி பஸ்களும் வந்து செல்லும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி பஸ் நிலைய வளாகத்தில் மேற்கு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்றனர்.