நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்பத்திருவிழா
நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட விழாவும், 4-ந் தேதி சுவாமி -அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடந்தது. நேற்று முன்தினம் சவுந்தர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன நிகழ்ச்சி நடந்தது.
தெப்பத்திருவிழா
நேற்று தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. அப்போது சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.