நெல்லை கமிஷனர் அலுவலகத்துக்கு இறந்த குழந்தையுடன் வந்த தம்பதி; போலீசார் மீது பரபரப்பு புகார்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இறந்த குழந்தையுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் போலீசார் மீது புகார் தெரிவித்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இறந்த குழந்தையுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் போலீசார் மீது புகார் தெரிவித்தனர்.
குழந்தை திடீர் சாவு
நெல்லை கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முகேஷ் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். அவருடைய மனைவி (சுவீதா 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று காலை இந்த பெண் குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அந்த குழந்தையை மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தை பரிதாபமாக இருந்தது.
கமிஷனர் அலுவலகத்தில்...
இந்த நிலையில் திடீரென்று முகேஷ்- சுவீதா தம்பதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு குழந்தையின் உடலை வைத்து கதறி அழுதனர். மேலும் முகேஷ் மற்றும் சிலர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டனர். பின்னர் மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு புகார்
இது தொடர்பாக முகேஷ் கூறுகையில், "நான் நெல்லையில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக என் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து என் மீது மட்டுமல்லாமல் எனது மனைவி, அம்மா, தம்பி ஆகியோர் மீதும் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது பொய்யாக போடப்பட்ட வழக்கு. பின்னர் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கால் என்னுடைய மனைவி வயிற்றில் இருந்த குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது குழந்தையின் உயிர் போய்விட்டது. இந்த பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பரபரப்பு புகார் கூறினார்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுபடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.