நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தனியார் பள்ளி மாணவன் சாவு தொடர்பாக நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் தனியார் பள்ளியில் படித்த 7-ம் வகுப்பு மாணவன் சீனு கடந்த 14-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியர், மாணவரை சாதி பெயரை சொல்லி திட்டியாதகவும், அதனால் சீனு தற்கொலை செய்து கொண்டாதகவும் கூறி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று பல்வேறு அமைப்பினர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன், ஆதி தமிழர் கட்சி ராமமூர்த்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், திராவிட தமிழர் கட்சி கதிரவன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, இன படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.