வருமானமின்றி தவிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள்


வருமானமின்றி தவிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள்
x

வருமானமின்றி தவிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள்

திருப்பூர்

திருப்பூர்,

ஷேர் ஆட்டோ பயன்பாடு மக்களின் போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக பயணிப்பதற்கு பதிலாக ஆட்களுடன் சேர்ந்து பயணித்து கட்டணத்தை பகிர்ந்து அளிப்பதால் ஷேர் ஆட்டோ பயணத்திற்கு ஆட்டோவை விட குறைந்த கட்டணமே ஆகிறது. மேலும் நமக்கு வேண்டிய இடத்தில் இறங்கி கொள்ளவும் முடிகிறது. ஷேர் ஆட்டோ பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரை பொறுத்தவரை அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ பயணத்தை தேர்வு செய்கின்றனர். கோவில்வழி பஸ் நிலையம், காங்கயம் ரோடு, விஜயாபுரம் போன்ற வழித்தடங்களில் ஷேர் ஆட்டோ செயல்பட்டு வருகிறது. இந்த ஷேர் ஆட்டோவின் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்வினாலும், பயணிகள் பற்றாக்குறையாலும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அதில் பயணிக்கும் பொதுமக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கூறியதாவது:-

எண்ணிக்கை குறைவு

சுந்தர் (ஷேர் ஆட்டோ ஓட்டுனர்):-

திருப்பூர் பழைய பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தத்தில் 24 ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. நான் 3 வருடங்களாக ஷேர் ஆட்ேடா ஓட்டுகிறேன். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்கிறேன். ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் தினசரி வாடகையாக ரூ.400 கிடைக்கிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தமிழக அரசு அறிவித்ததில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

மேலும் திருப்பூரில் உள்ள பல தொழிற்சாலைகள் தற்போது வேலையின்றி இருப்பதால் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் ஷேர் ஆட்டோவில் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிந்தன் (கரட்டாங்காடு):-

நான் 6 வருடங்களுக்கு மேலாக ஷேர் ஆட்டோ ஓட்டுகிறேன். பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்வழி பஸ் நிலையம் வரை உள்ள வழித்தடத்தில் தினமும் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறேன். ஷேர் ஆட்டோவின் கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கின்றோம். மேலும் தற்போது டீசல் விலை உயர்வாலும் பயணிகள் வருகை குறைவாலும் வருமானம் குறைந்து வருகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

முருகேசன் (செட்டிபாளையம்):-

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து 60 சதவீதம் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக தினமும் ரூ.2ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1,200 மட்டுமே கிடைக்கிறது. மேலும் டீசல், வாகன தேய்மானம் போக ரூ.200 மட்டுமே ஷேர் ஆட்டோவின் உரிமையாளருக்கு மிஞ்சுகிறது. இதனால் ஷேர் ஆட்டோ உரிமையாளர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனோஜ், (கோவில்வழி):-

பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கயம் ரோடு விஜயாபுரம் வரை உள்ள வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறேன். நான் ஒரு வருடமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மதுப்பிரியர்கள் மது குடித்து விட்டு வந்து ஷேர் ஆட்ேடாவில் ஏறி தொந்தரவு செய்கின்றனர். பயணிகளின் நலன் கருதி மதுப்பிரியர்களை அந்த இடத்தில் இருந்து அனுப்புவதற்குள் பெரும்பாடு பாடு பட வேண்டி இருக்கிறது.

மேலும் 2 வருடங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.8 ஆக இருந்தது. ஆனால் தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் எங்களுடைய வருமானம் கிடைக்காமல் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பெண்களுக்கான இலவச பயண பஸ்களை விட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

இடநெருக்கடி

கார்த்திகா ரமேஷ், (பயணி):-

நான் 16 வருடங்களாக விஜயாபுரத்தில் வசித்து வருகிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே பஸ்கள் செயல்படுகிறது. பஸ்சில் இருந்து இறங்கி நடந்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஷேர் ஆட்டோவில் நாம் விரும்பிய இடத்தில் இறக்கும்படி கேட்டால் இறக்கி விடுகின்றனர். மேலும் பஸ்கள் எடுப்பதற்கு ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் நின்று செல்லும். ஆனால் ஷேர் ஆட்டோவில் ஆட்கள் ஏறிவிட்டால் சீக்கிரம் சென்றுவிடும்.

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும்போது மதுப்பிரியர்கள் வந்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களை ஆட்டோவில் ஏற்றுவதில்லை. மேலும் இரவு நேரத்தில் ஆட்டோவை விட ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கிறது.

ஷேர் ஆட்டோவில் செல்லும் போது சில நேரங்களில் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இதனால் இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோவில் குனிந்து போக வேண்டிய நிலை உள்ளது. சில நேரம் கவனிக்காமல் தலையை பொதுமக்கள் இடித்து கொள்கின்றனர். எனவே 14 பேர் வரை ஷேர் ஆட்டோவில் ஏற்றினால் நன்றாக இருக்கும்.

செந்தில்குமார், (நாரணம்பாளையம்):-

ஷேர் ஆட்டோவில் செல்வதால் ஆட்டோவைவிட கட்டணம் குறைவு. மேலும் நமக்கு வேண்டிய இடத்தில் ஏறி, இறங்கி செல்ல முடிகிறது. குறிப்பாக எனக்கு தற்போது காலில் காயம் ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ளேன். இந்த நிலையில் பஸ்சில் செல்வதைவிட ேஷர் ஆட்டோவில் செல்வது சிறந்ததாக இருக்கிறது. இதேபோல் மருத்துவமனைக்கு செல்வோருக்கு ஷேர் ஆட்டோ பயணம் பயனுள்ளதாக இருக்கிறது.

இவ்வாறு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஷேர் ஆட்டோ ஓட்டுவதற்கு தற்போது ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஷேர் ஆட்டோக்களை தினமும் பயன்படுத்துவதால் தேய்மானம் ஏற்படுகிறது. இதற்காக ஒர்க் ஷாப் கொண்டு செல்லும்போது அங்கேயும் ஆட்கள் இல்லாமல் ஆட்டோவை பராமரிக்க முடியாமல் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கஷ்டப்படுகின்றனர். இதன் காரணமாக பயனுள்ள போக்குவரத்து பயணமாக ஷேர் ஆட்டோ இருந்தாலும் தற்போது வருமானமின்றி ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

----------------


Next Story