ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: கோவில்களின் பெயரில் தனியார் இணையதளங்களா?-ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை


ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: கோவில்களின் பெயரில் தனியார் இணையதளங்களா?-ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
x

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் பெயரில் தனியார் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர்.

மதுரை


அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் பெயரில் தனியார் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர்.

கோவில் இணையதளங்கள்

ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்க்கண்டன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோவில்கள், மடங்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். நேரடியாக வருபவர்கள் நன்கொடை, காணிக்கைகளை கோவில்களில் செலுத்தி உரிய ரசீதை பெறுகின்றனர்.

வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோவில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் நிதி செலுத்துகின்றனர்.

சென்னை கபாலீஸ்வரர், பழனி முருகன், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கள், தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரபலமான கோவில்களிலும், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் என ஒவ்வொரு கோவிலுக்கும் என்று கோவில் சார்பில் அதிகாரபூர்வ இணையதளங்கள் உள்ளன.

மோசடி

கோவில் பெயரை கொண்டுள்ள சில தனியார் இணையதளங்கள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றன. போலியான இணையதளங்களை உருவாக்கி ஏராளமான நிதியை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றன.. எனவே மோசடி நடவடிக்கைகளில் தனியார் இணையதளங்கள் ஈடுபடுவதை தடுக்கவும், அவற்றை முடக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

நீதிபதிகள் எச்சரிக்கை

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கோவில் பெயரில் போலி முகவரியில் இணையதளங்களை தனியார் செயல்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என எச்சரித்தனர்.

விசாரணை முடிவில், கோவில் பெயரில் இயங்கும் போலி இணையதளங்களை கண்டறிந்து எவ்வாறு தடை செய்வது? என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story