விவசாயிகள் சிரமமின்றி காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை


விவசாயிகள் சிரமமின்றி காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் சிரமம் இன்றி காய்கறி விற்பனை செய்யதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதி அளித்தார்.

தினசரி காய்கறி மார்க்கெட்

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக மாநகராட்சி சார்பில் தரைத்தளத்துடன் கூடிய 2 மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகளுக்கு ஒப்படைக்காமல் அந்த இடத்தை வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கடைகளில் வியாபாரிகளை அமர்த்தாமல் ஓராண்டாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் காய்கறிகளை விற்க முடியாமல் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு என்று கட்டப்பட்ட கட்டிடத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காய்கறிகளை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.

சேறும், சகதியுமான சாலை

இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று அங்கி திரண்டு இருந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சங்கத்தின் நிறுவனர் ஈசன் மற்றும் விவசாயிகள் முறையிட்டனர். தேங்கிய மழைநீர் 24 மணி நேரத்தில் அகற்றப்படும். சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படும் என்றும், விவசாயிகள் சிரமம் இல்லாமல் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று மேயர் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இதுபோல் இன்று (வியாழக்கிழமை) கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தினசரி மார்க்கெட்டில் நாற்றுநடும் போராட்டம் அறிவித்திருந்தனர். சேறும், சகதியுமான இடத்தை சுத்தம் செய்து கற்கள் பதிக்கப்படும் என்று மேயர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இன்று மேயரிடம் மனு கொடுத்து முறையிட உள்ளனர்.



Next Story