நோயாளிகளின் பயன்பாட்டுக்காக புதிய பேட்டரி கார்
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து வாங்கப்பட்ட ரூ.6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி காரை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி
புதிய பேட்டரி கார்
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேட்டரி காரின் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புதிய பேட்டரி காரின் இயக்கத்தினை கலெக்டர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அந்த காரில் பயணம் செய்தார். பின்னர் அந்த காரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசரகால தாய், சேய் சிகிச்சை மையம் - ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தில் உள்ள டாக்டர்களிடம் அவர் ஒப்படைத்தார்.
பராமரிக்க வேண்டும்
அப்போது கலெக்டர் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள புதிய பேட்டரி காரை நோயாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பேட்டரி காரை முறையாக பராமரித்து பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, துணை முதல்வர் சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.