புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 595 மையங்களில் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத மக்களுக்கு எழுத்தறிவு கற்றுக்கொடுக்கும் வகையில், 595 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.
எழுத்தறிவு திட்டம்
தமிழகத்தில் எழுத, படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுக்கொடுப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் எழுத்தறிவு இல்லாதவர்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக்கு செல்லாத மற்றும் எழுதப் படிக்கத் தெரியாத 9 ஆயிரத்து 556 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுக்கொடுப்பதற்காக மாவட்டத்தில் 595 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கற்றுக்கொடுப்பதற்காக 595 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
100 நாட்கள் வகுப்புகள்
இந்த அனைத்து மையங்களிலும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக எழுத்தறிவு இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கும் பணிகள் தொடங்கியது.
தேனி அருகே அரண்மனைப்புதூரில் அமைக்கப்பட்ட மையத்தில் இந்த திட்டத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் இதில் கலந்துகொண்ட மக்களுக்கு கற்றல் கையேடுகள், அடிப்படை எழுத்தறிவு புத்தகத்தை அவர் வழங்கினார்.
அதுபோல், மாவட்டத்தின் பிற மையங்களிலும் கல்வித்துறை அலுவலர்கள், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் கற்பித்தல் பணிகளை பார்வையிட்டனர்.
அடிப்படை கல்வி
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "இந்த திட்டத்தின் மூலம், 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் இறுதி வரை இதற்கான வகுப்புகள் நடக்கும். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் 100 நாட்களுக்கு மொத்தம் 200 மணி நேரம் வகுப்புகள் நடக்கும். பள்ளி வேலை நாட்களில் மட்டுமே இந்த வகுப்புகள் நடக்கும். இதற்காக பள்ளிகளிலும், குடியிருப்புகளிலும், தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதற்கான தேர்வு நடத்தப்படும். பின்னர் இதில் பங்கேற்ற மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் போது அடிப்படை கல்வியோடு, வங்கிப் படிவங்கள், ஏ.டி.எம். பயன்படுத்தும் விதம், அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் பயன்பெறுவது தொடர்பாகவும் கற்பிக்கப்படவுள்ளது" என்றனர்.