நாகை மாவட்டத்தில் 10 கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது- கலெக்டர்
நாகை மாவட்டத்தில் 10 கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
நாகை மாவட்டத்தில் 10 கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
கொள்முதல் நிலையம் திறப்பு
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஊராட்சி தலைவர் விமலா ராஜா வரவேற்றார். கலெக்டர் அருண் தம்புராஜ், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.
அப்போது கலெக்டர் பேசுகையில், 'நாகை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. சிக்கல் ஊராட்சி பனைமேடு கிராமத்தில் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிக்கல் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்த கிராமத்துக்கு 12 பணிகள் வழங்கப்பட்டு 9 பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் சிக்கல், பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை அந்தணப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள 750 விவசாயிகள் பயன் பெறுவார்கள். கடந்த ஆண்டு இங்கு 30 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை இங்கு திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று பயன் அடையலாம்.
விவசாயிகளிடம் அன்பு காட்ட வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அன்புடன் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது' என்றார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் கவுரி ராஜேந்திரன், தாசில்தார் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.