ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம்; ரூ.32½ கோடியில் சாலைப்பணிகள்
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது, ரூ.32½ கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மே.31-
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது, ரூ.32½ கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல்
திருச்சி மாநகராட்சி மாமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். காலை சரியாக 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய அவர் காலை 10.50 மணிக்கு முடித்தார். பட்ஜெட்டில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ரூ.2½ கோடியில் புதிய வார்டு அலுவலகம்
*திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.40 கோடியில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வார்டு குழு அலுவலக எண் 3-க்கு தேவையான புதிய கட்டிடம் ரூ.2.50 கோடியில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு வார்டு குழுவிற்கும் தலா ரூ.1 கோடியே 30 லட்சம் வீதம் 5 வார்டு குழுவிற்கும் மொத்தம் ரூ.6 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டு, அந்தந்த வார்டு பகுதிகளில் சிறு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். வார்டு குழுவிற்கு இதுவரை பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு ரூ.50 ஆயிரமாக இருந்ததை ஒரு பணிக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தி வார்டு குழுவில் தீர்மானம் நிறைவேற்றி வேலைகள் மேற்கொள்ளலாம்.
புதிய நாய் கருத்தடை மையம்
*பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெரு நாய்களின் பிறப்பு விகிதத்தினை கட்டுப்படுத்த ஏற்கனவே வார்டு குழு எண் 5-ல் உள்ள நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக இதர 4 வார்டு குழுவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதியநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் கட்ட ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
*மேலப்புதூர் ரெயில்வே பாலத்திற்கு அருகில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்க புதிய நடைபாதை மேம்பாலம் அரசு மானியம் பெற்று அமைக்கப்படும்.
*மாநகராட்சி பகுதியில் உள்ள 40 ஆயிரத்து 668 எண்ணிக்கையிலான தெருவிளக்குகளில் பரீட்சார்த்த முறையில் முதல் கட்டமாக சூரிய ஒளி மின்சாரம் பெற்று இயங்கக்கூடிய வகையில் அரசு மானியம் பெற்று 5 ஆயிரம் எண்ணிக்கையில் மின் விளக்குகள் மாற்றி அமைக்கப்படும்.
5-வது வார்டு குழுவுக்கு புதிய கட்டிடம்
தற்போது சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் பின்புறம் புத்தூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் வார்டு அலுவலகம் எண் 5-ல் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் தற்போதைய பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான இடவசதி இல்லாததால் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் எதிரே காலியாக உள்ள இடத்தில் வார்டு குழுஅலுவலகம் எண் 5-க்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
*நூற்றாண்டை கடந்த மாரிஸ் திரையரங்க ரெயில்வே மேம்பாலம் தற்போதைய போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து அகலப்படுத்தப்படும். இந்த பணிக்காக ரூ.44 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதில் ரெயில்வே பங்கு தொகையாக ரூ.22 கோடி, மீதமுள்ள தொகை ரூ.22 கோடி உட்கட்டமைப்பு மற்றும்வசதிகள்திட்டத்தின்கீழ்வழங்கப்படும்.நடப்பாண்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம்
குடியிருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஸ்ரீரங்கத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யவும், அதற்கான நிதியை அரசிடம் பெற்று பணியை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
*வார்டு எண்: 8-க்குட்பட்ட சோழம்பாறை குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் தாங்குச்சுவர், கழிவுநீர் சேகரக்கிணறு மற்றும் ஸ்லூயிஸ்வால்வுபொருத்தும்பணி ரூ.2கோடியே46லட்சம்மதிப்பீட்டில்மேற்கொள்ளப்படுகிறது.கொல்லாங்குளம் நீர்நிலையை சுற்றிலும் சைக்கிள்கள் செல்வதற்கான பாதை, நடைபாதை,குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் மற்றும் பசுமை அமைப்புகள் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு பொழுதுபோக்குடன் கூடிய சுற்றுச்சூழலை உருவாக்கி புனரமைக்கப்படும்.
ரூ.32½ கோடி சாலைப்பணிக்கு ஒதுக்கீடு
*திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பில் 128 சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
*பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களை பெறுவதற்கும், சொத்துவரி, குடிநீர் வரி, பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு வசதியாக 65 வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
2-ந் தேதி விவாதம்
பட்ஜெட் வாசிக்கப்பட்டதும், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடத்தப்படும் என்று மேயர் அன்பழகன் அறிவித்தார்.