சேதமடையும் நிலையில் புதிய பஸ்நிலைய கட்டிடம்
ஊழியர்களின் கவன குறைவால் சேதமடையும் நிலையில் புதிய பஸ்நிலைய கட்டிடம் உள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஊழியர்களின் கவன குறைவு மற்றும் பராமரிப்பு குறைவால் பஸ் நிலைய வளாகம் சுகாதாரக் கேடு ஏற்பட்டு உள்ளத்துடன், கட்டிடம் சேதம் அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள சுகாதாரக் கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு, மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. தண்ணீர் நிரம்பிய பின்னர் ஊழியர்களின் கவன குறைவால் மோட்டார் தொடர்ந்து ஓட்டிக்கொண்டு இருப்பதால், தொட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் பஸ் நிலைய வளாகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் கட்டிட மாடியில் தண்ணீர் தேங்கி செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிட சுவரில் நீர் இறங்கி சுவர்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளது. பஸ் நிலையத்தை சுகாதாரமாகவும், சேதம் அடையாமல் பராமரிக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.