சந்திரபாடி மீனவ கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்
பொறையாறு அருகே சுதந்திர வரலாற்றில் முதன் முறையாக சந்திரபாடி மீனவ கிராமத்துக்கு இயக்கப்பட்ட பஸ்சை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஓட்டிச்சென்றார்.
பொறையாறு அருகே சுதந்திர வரலாற்றில் முதன் முறையாக சந்திரபாடி மீனவ கிராமத்துக்கு இயக்கப்பட்ட பஸ்சை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஓட்டிச்சென்றார்.
பஸ் வசதி இல்லை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே சந்திரபாடி என்ற மீனவ கிராமம் உள்ளது. மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த மீனவ கிராமத்துக்கு, பொறையாறில் இருந்து செல்ல வேண்டுமானால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் எல்லையான குப்புச்செட்டி சாவடி வழியாகத்தான் செல்ல வேண்டும். 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில் இந்த கிராமத்துக்கு தமிழகத்தில் இருந்து பஸ் வசதி செய்து தரப்படவில்லை. அந்த கிராமத்துக்கு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பஸ் சேவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
கிராம மக்கள் வலியுறுத்தல்
இதையடுத்து அரசு பஸ் வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர்.
சந்திரபாடி மீனவ கிராமத்துக்கு தமிழக அரசு பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஊராட்சி தலைவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வரலாற்றில் முதன் முறையாக...
அதன்படி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சந்திரபாடி மீனவ கிராமத்துக்கு இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக நேற்று தமிழக அரசின் நகர பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதற்கான விழா சந்திரபாடி மீனவ கிராமத்தில் நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார் தலைமை தாங்கினார். செம்பனார் கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் இளங்கோவன், நாகை கோட்ட மேலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பஸ்சை எம்.எல்.ஏ. ஓட்டினார்
பொறையாறு கிளை மேலாளர் ஆசீர்வாதம் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து, பஸ்சை சந்திரபாடி மீனவ கிராமத்தில் இருந்து பொறையாறு பஸ் நிலையம் வரை 6 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்றார்.
புதிதாக பஸ் சேவை தொடங்கப்பட்டதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்தனர். விழாவில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்தீக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்தவிஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த வழித்தடத்தில் காலை, மாலை என இரு வேளைகள் பஸ் போக்குவரத்து நடைபெறும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.