மரகதாம்பிகை அம்மனுக்கு புதிய தேர் செய்யும் பணி
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலை கோவிலில் மரகதாம்பிகை அம்மனுக்கு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஓசூர்:
ஓசூரில் மலை மீது உள்ள மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. விழாவின்போது சந்திரசூடேஸ்வரர் பெரிய தேரிலும், மரகதாம்பிகை அம்மன் சிறிய தேரிலும் வலம் வருவது வழக்கம். இந்த நிலையில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை அம்மன் தேர் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தேர் செய்யும் பணிக்காக 30 டன் மருதம், தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டன.
இந்தநிலையில் தேர் செய்யும் பணி தேர்பேட்டையில் தொடங்கியது. ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சந்திரசூடேஸ்வரர் தேரோட்ட கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக கோவில் அர்ச்சகர் வாசீஸ்வரன் சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் முருகன், செயலாளர் பிரவீன்குமார், ஓசூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் சூடப்பா, தேரோட்ட கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயதேவன், பி.கே.நாகராஜூ, அசோக் மற்றும் ஊர் கவுண்டர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். புதிய தேர் செய்யும் பணி 3 மாதத்தில் நிறைவு பெறும் என்று ஸ்தபதி இளவரசன் தெரிவித்தார்.