புதிய தேர் அமைக்கும் பணி தீவிரம்


தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் தேர்பேட்டையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சந்திரசூடேஸ்வரர் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின்போது, முதலில் விநாயகரை வைத்து சிறிய தேரும், அதனைத்தொடர்ந்து சந்திரசூடேஸ்வரசாமி பெரிய தேரும், அடுத்ததாக மரகதாம்பிகை அம்மனின் தேரும், பக்தர்களால் வடம்பிடித்து இழுத்து செல்லப்படும். இந்த நிலையில், மரகதாம்பிகை அம்மன் தேர் பழுதாகியதால் புதிய தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை சந்திரசூடேஸ்வரர் தேரோட்ட கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், புதிதாக அடைக்கப்படும் மரகதாம்பிகை அம்மன் தேர் 14 அடி உயரம், 14 அடி அகலம் கொண்டதாகும். இந்த தேரில் பூதகணங்கள், யாழி, தல வரலாற்று சிற்பங்கள், குதிரை, யானை போன்றவை பழமை மாறாமல் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர், அலங்காரத்துடன் சுமார் 50 அடி உயரம் கொண்டதாக இருக்கும். திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி இளவரசன் தலைமையில் குழுவினர் தேர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அறநிலையத்துறையின் ரூ.3.69 லட்சம் பங்களிப்புடன் மொத்தம் ரூ.64 லட்சம் செலவில் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 6 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த பணி, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அறநிலையத்துறை சார்பில் தேரின் முக்கிய அச்சாணி மற்றும் 4 சக்கரங்கள், திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வர வேண்டும். அவை வந்தவுடன் தேரில் பொருத்தி, வெள்ளோட்டம் விடப்படும். இந்த பணி நிறைவடைந்தால், வருகிற மார்ச் மாதம் தேர்த்திருவிழாவிற்கு தேர் தயாராகி விடும் என்று கூறினார்.


Next Story