ஏர்வாடி திருவழுதீசுவரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்


ஏர்வாடி திருவழுதீசுவரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
x

42 ஆண்டுகளுக்கு பிறகு ஏர்வாடி திருவழுதீசுவரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஒன்றான ஏர்வாடி திருவழுதீசுவரர், பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் 42 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படாததால் தேர் பராமரிப்பற்று சேதமடைந்தது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.1 கோடியில் புதிய தேர் எழில்மிகு கலைநயத்துடன் அமைக்கப்பட்டது. மேலும் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.

தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கும்பம் தேரில் எழுந்தருளியதும், வெள்ளோட்டம் தொடங்கியது.

42 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரத வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

விழாவில் செங்கோல் ஆதினம், செல்வம் பட்டர், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ரிஷப், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story