தமிழக-கேரள எல்லையில் புதிய சோதனைச்சாவடி திறப்பு
24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான கோட்டூரில் புதிய சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.
பந்தலூர்,
24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான கோட்டூரில் புதிய சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.
புதிய சோதனைச்சாவடி
பந்தலூர் தாலுகா எருமாடு அருகே கோட்டூர் பகுதி தமிழக-கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ளது. அப்பகுதி வயநாடு மாவட்டம், மேப்பாடி, வைத்திரி, அம்பலவயல் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையாக உள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், மணல் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும்,
கஞ்சா, போதை பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வருவதை தடுக்கவும் கோட்டூரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனைச்சாவடி சாலைக்கு கீழ் பள்ளதாக்கான இடத்தில் கட்டப்பட்டு இரு்நதது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கோட்டூரில் சாலையோரத்தில் பாலத்தை ஒட்டி ரூ.10 லட்சம் செலவில் அடிப்படை வசதிகளுடன் புதிதாக சோதனைச்சாவடி கட்டப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
இந்தநிலையில் நேற்று சோதனைச்சாவடி திறப்பு விழா நடந்தது. நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் ரிப்பன் வெட்டி புதிய சோதனைச்சாவடியை திறந்து வைத்தார். தொடர்ந்து காவல்துறை சார்பில், புளிங்குன்னு, கரும்பங்கொல்லி, அட்டிகுனி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்களுக்கு தண்ணீர் தொட்டிகளை வழங்கினார். பின்னர் மோகன் நவாஸ் பேசும்போது, புதிய சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காவல்துறையை அணுகினால், குறைகளை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், எருமாடு போலீஸ் இன்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜனார்த்தனன், வேலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.