ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய கலெக்டர் அலுவலகம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிதாக ‌கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன் அலுவலகத்தில் குத்துவிளக்கும் ஏற்றி வைத்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

அணிவகுப்பு மரியாதை

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து, கலெக்டர் அலுவலகம் கட்டிய ஒப்பந்ததாரர் நாமக்கல் பி.எஸ்.கே என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தின், கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் சிறப்புகளை விவரிக்கும் குறும்படத்தை பார்த்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம்.முனிரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

4 தளங்கள்

புதிய கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் வருவாய் பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் கருவூலம், மக்கள் குறைதீர்வு அரங்கம், மக்கள் தொடர்பு அலுவலகம், இ.எல்.சி.ஓ.டி. பிரிவு அலுவலகம், முதல் தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, சிறு கூட்ட அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், சி.டி.இ. பிரிவு அலுவலகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), நேர்முக உதவியாளர் (தேர்தல்), நேர்முக உதவியாளர் (கணக்கு) மற்றும் பிரிவு அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கு மற்றும் வருவாய் அலுவலகம் உள்ளன.

இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அறை, கூட்ட அரங்கம், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து), தேர்தல் அலுவலகம் (மாவட்ட ஊரக பிரிவு), நேர்முக உதவியாளர் (மதிய உணவு), பிரிவு அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறு கூட்ட அரங்கம், கலந்தாய்வு அரங்கு, திட்ட இயக்குனர் (ஐ.சி.டி.எஸ்.)அலுவலகம் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் தளத்தில் இணை இயக்குனர் (கூட்டுறவு சங்கம்), பதிவுத்துறை அலுவலகம், இணை இயக்குனர் (வேளாண்மை பிரிவு) அலுவலகம், இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலகம், இணை இயக்குனர் (சுகாதாரப்பிரிவு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம் மற்றும் சிறு கூட்ட அரங்கம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆரம்பக் கல்வி அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, கோட்டை சுற்றுச்சூழல் பொறியாளர் (மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்), தமிழ் வளர்ச்சித் துறை, கனிமவளத்துறை, கூட்ட அரங்கம் ஆகியவை உள்ளன.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

இந்த கலெக்டர் அலுவலகத்தில் கூட்ட அரங்கம் பெரியது -3 (200 நபர்களுக்கு மேல்), சிறியது -7 (200 நபர்களுக்குள்), ஜி.டி.பி. ஹால் -1 (300 நபர்கள்), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின் தூக்கி (லிப்ட்) - 12, படிக்கட்டு -9, அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி ஆகியவை உள்ளன.

கட்டிடத்தினை சுற்றிலும் சாலை வசதி, அனைத்து தளங்களிலும் கழிவறை வசதிகள், நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால் அமைப்பு, அலங்கார தெரு விளக்குகள், செயற்கை நீரூற்று பூங்கா, திசைகாட்டி மற்றும் பெயர் பலகைகள், முகப்பு அலங்கார வளைவு ஆகியவை உள்ளன.

பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி, பொதுமக்களின் காத்திருப்போர் அறை, சுற்றுச்சுவர், நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், 2 சக்கர வாகன நிறுத்துமிடம், உணவகம் -2 ஆகியவை உள்ளன.


Next Story