தேனியில் புதிதாக கட்டப்பட்டு வரும்வனத்துறை அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து தொழிலாளி பலி


தேனியில் புதிதாக கட்டப்பட்டு வரும்வனத்துறை அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வனத்துறை அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்ததில் தொழிலாளி பலியானார்.

தேனி

வன அலுவலக கட்டிடம்

தேனி கே.ஆர்.ஆர். நகரில் ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பழைய கட்டிடத்தையொட்டி புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய கட்டிடத்தின் முன் பகுதியில் அதிகாரியின் வாகனம் நிறுத்தும் பகுதியில் தூண் கட்டப்பட்டு கான்கிரீட் மேற்கூரை அமைக்கப்பட்டது. இதில், மேல்பகுதியில் முக்கோண வடிவில் கான்கிரீட் இணைப்பு அமைத்து மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தூண்களுக்கு வெளியே இரு புறமும் அரைவட்ட வடிவில் மேற்கூரை அமைக்கப்பட்டது.

இடிந்து விழுந்தது

இந்த மேற்கூரையில் உள்பக்கம் சிமெண்டு பூசும் பணி நேற்று நடந்தது. இதற்காக அங்கு கம்புகளால் சாரம் கட்டப்பட்டது. அதன் மேல் நின்று கொண்டு தொழிலாளர்கள் சிலர் சிமெண்டு பூசும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். பகல் 12.30 மணியளவில் திடீரென மேற்கு பகுதியில் இருந்த அரைவட்ட வடிவிலான மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் சரிந்தது. அப்போது அது சாரம் அமைந்துள்ள பகுதியில் அந்தரத்தில் தொங்கியது.

சுமார் 30 அடி நீளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த போது, சிலர் கீழே குதித்து உயிர் பிழைத்தனர். அதேநேரத்தில் 2 பேர் பலத்த காயம் அடைந்து கம்புகளால் அமைக்கப்பட்ட சாரம் பகுதியில் சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தேனி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொழிலாளி பலி

படுகாயம் அடைந்த 2 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் காயம் அடைந்தவர்கள் பெரியகுளம் பங்களாபட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 37), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோக் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை

தரமற்ற கட்டுமான பணியால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்திடம் கேட்டபோது, 'வன அலுவலக விரிவாக்கப் பணியானது ஒப்பந்தம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் நடந்து வருகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து கட்டுமான பணி முழுமையாக ஆய்வு செய்யப்படும். தரமற்ற சிமெண்டு கலவையால் இடிந்ததா? அல்லது தரம் குறைவான கட்டுமான கம்பிகள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த விபத்து தொடர்பாக கட்டுமான பணியின் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என்றார்.


Related Tags :
Next Story