பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாணவிகள் கருத்துகளை தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாணவிகள் கருத்துகளை தெரிவித்தனர்.
மாணவிகள் கருத்து
மாநில கல்வி கொள்கை தொடர்பாக உயர்மட்ட குழுவினர் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது குழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான முருகேசன் மற்றும் குழு உறுப்பினர்களிடம் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அவ்வாறு மாணவ- மாணவிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
வெண்பா: பள்ளியில் மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளும் வகையில் நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும்.
பிரியதர்ஷினி: கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாய கல்வி, நெசவு தொழில், சமையல் கலை, தோல் பொருள் உள்பத்தி குறித்து கற்பிக்க வேண்டும்.
ஜெகதீஸ்: ஆன்லைன் வகுப்புகளால் பாடங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
தற்காப்பு கலைகள்
கலாவதி: தாய் மொழி கல்வி படிக்க வேண்டும். பரிசோதனை முறையில் செய்முறை விளக்கத்தோடு கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும். தலைமை பண்பு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளையும் கற்பிக்க வேண்டும்.
சந்தியா: கணினி பயன்பாடு பாடம் கற்பிக்க வேண்டும். மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் நூலகங்கள் உள்ளது. ஆனால் அங்கு வாரத்துக்கு ஒருமுறை தான் படிக்க வைக்க அனுமதிக்கின்றனர். எனவே தினமும் சென்று படிக்க அனுமதி வழங்க வேண்டும்.
இலக்கியா: பள்ளியில் கழிவறை வசதி, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வேண்டும். தூய்மை பணி மேற்கொள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகள்
பவித்ரா: அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதி, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். விளையாட்டு கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கபிலன்: செய்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்கி கற்பிக்க வேண்டும். கூடுதலாக வேறு ஒரு மொழியை கற்பிக்கலாம். மாலை நேர வகுப்புகளும் நடத்த வேண்டும். தனியார் பஸ்களில் செல்ல இலவச பாஸ் வழங்க வேண்டும்.
சந்தியா: போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உளவியல் சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். மாணவர்கள் பலர் ஆசிரியர்களை தாக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மாணவர்களை கண்டிக்க ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ: வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புகளை பெற எந்த பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
ஆசிரியர் பணியிடங்கள்
சுதர்சன்: ஆசிரியர்கள் குறுகிய நேரத்தில் அதிகப்படியான பாடங்களை நடத்துகின்றனர். மாணவர்களால் அதை புரிந்து கொள்ள சிரமாக உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கிரிஜா: கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு தாமதமாக நடத்த கூடாது. இதனால் படிப்பதில் சிக்கல்கள் உள்ளது. அரசு கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்த வேண்டும். வளாகத்தேர்வினை சந்திக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதற்கான பாடத்திட்டமும் உருவாக்க வேண்டும்.
கூட்டத்தில் மாணவ- மாணவிகள் கூறிய சில கருத்துகள்: காலத்துக்கு ஏற்றவாறு ஆசிரியர்களும் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்க வேண்டும். கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். உருது, அரபிக் போன்ற மொழி பாடங்களையும் முதன்மையான மொழிபாடமாக கற்பிக்க வேண்டும். மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் பள்ளியிலேயே அதுகுறித்த கல்வி புகுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமையால் அளிக்கப்படும் தண்டனை விவரங்களையும் பாடமாக கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழிற்கல்விக்கு முக்கியத்துவம்
கூட்டத்தில், மாணவர்கள் பலர் தங்களது கருத்துகளை கூற தடுமாறினர். அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி கூறுகையில், இது பெற்றோர், ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து மனப்பாடமாக கூறச்சொன்னதால் ஏற்பட்ட தவறு என்றார்.
தொடர்ந்து தொழிற்கல்வியின் அவசியம் குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் பேசுகையில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குறைந்தது 2 பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் டாக்டராகவோ, என்ஜினீயராகவோ மாறப்போவதில்லை. எனவே மெல்ல கற்கும் மாணவர்களுக்காக அனைத்து பள்ளிகளிலும் இதனை அறிமுகம் செய்ய வேண்டும்.
தற்போதுள்ள பாடப்பிரிவு ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது அப்பாடப்பிரிவு மூடும் நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளையும் தொழிற்கல்வி பாடம் மூடும் நிலை ஏற்படும். இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.