போடியில் ரூ.160 கோடியில் புதிய குடிநீர் திட்டம்; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
போடியில் ரூ.160 கோடியில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் ேக.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போடியில் ரூ.160 கோடியில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் ேக.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதிய குடிநீர் திட்டம்
போடி நகராட்சியில் குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்கும் வகையில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக போடியை அடுத்த பரமசிவம் கோவில் பகுதியில் ரூ.160 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய குடிநீர் திட்டம் தொடக்க விழா, போடி பரமசிவம் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வரவேற்றார். குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி திட்ட விளக்க உரையாற்றினார். போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலைய எந்திரத்தை இயக்கி வைத்தனர்.
எல்லாருக்கும் எல்லாம்
பின்னர் விழாவில் அமைச்சர் ேக.என்.நேரு பேசுகையில், போடி நகராட்சியில் தற்போது ரூ.2½ கோடியில் வணிக வளாகம், ரூ.160 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.40 லட்சத்தில் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,650 கோடியில் குடிநீர் திட்டங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தேனி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் முதல்- அமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்ற ஆவண செய்வேன் என்றார்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், போடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டம் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மணி மகுடம் ஆகும். 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற திட்டத்தின்கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறார் என்றார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த விழாவில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன் (கம்பம்), சரவணன் (பெரியகுளம்), போடி நகராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன், ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி, தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜா ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பரணி, பஜீர் முகமது மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள கலந்துகொண்டனர்.