ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம்
திருச்சி மஞ்சத்திடலில் ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
திருச்சி மஞ்சத்திடலில் ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
மின்சார ரெயில் பராமரிப்பு
திருச்சி கோட்டத்தில் மின்சார ரெயில் பராமரிப்பு முனையம் அமைக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் டீசல் என்ஜின் கொண்டு ரெயில்கள் இயக்கப்படுவது தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து டீசல் என்ஜின் ரெயில்கள் படிபடியாக மின்சார ரெயில்களாக மாற்றப்படுகிறது.
ஏற்கனவே தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் மற்றும் சென்னை ரெயில்வே கோட்டங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தாமதம்
ஆனால் திருச்சி கோட்டத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. டீசல் ரெயில்கள் மின்சார ரெயில்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு, ஆவடி, தாம்பரம், ஆகிய பகுதிகளில் மின்சார ரெயிலுக்கான பராமரிப்பு முனையம் இயங்கி வருகிறது.
இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரி கூறியதாவது:-
திருச்சி பொன்மலை அருகே உள்ள மஞ்சத்திடல் ரெயில் நிலைய பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் மின்சார ரெயில் பராமரிப்பு முனையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.55 கோடி ரெயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2023) தொடங்கி 2024-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இதில் ஒரே நேரத்தில் 2 மின்சார ரெயில்களை பராமரிக்கும் வகையில் முனையம் அமைய உள்ளது. இதனால் திருச்சி கோட்டத்தில் தற்போது சாதாரண பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் பயணிகள் ரெயில் வண்டிகளும், டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் வண்டிகளும் படிப்படியாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளாக இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.