ரூ.7¼ லட்சத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்
ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் இடையக்கோட்டையில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வங்கிகள், தொழிற்சாலைகள், லேத் பட்டறைகள் உள்ளன. இடையக்கோட்டையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதோடு, குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை ஆகிறது. இதனால் லேசான காற்று அல்லது மழை பெய்தால் கூட மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
குறிப்பாக குறைந்த அழுத்த மின்சார வினியோகத்தால் டி.வி., குளிர்பதன பெட்டி, சலவை எந்திரம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி அவதிப்பட்டனர்.
இதுகுறித்து இடையக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். இதைக்கருத்தில் கொண்டு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் இடையக்கோட்டையில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. ஒட்டன்சத்திரம் கோட்ட செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) மணிமேகலை, இடையக்கோட்டை உதவி மின் பொறியாளர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் செல்விசெல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.