புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுக்கோட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

புதுக்கோட்டை

தற்கொலை

புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). இவரது மகள் வித்யா (27). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்திருந்தார். இவருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சங்கரும் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். அவர் புதுக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வித்யா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

உருக்கமான கடிதம்

தற்கொலை செய்த வித்யா, தனது அண்ணனுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது போலீசாரிடம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், அப்பா-அம்மாவை பார்த்துக்கொள்ளும்படி அவர் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையில் வித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வித்யாவின் தற்கொலை சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருமணமான 6 மாதத்தில் வித்யா தற்கொலை செய்துகொண்டதால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story